கீரை பறிக்கச் சென்ற மூதாட்டி வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளுக்கிடையே சிக்கிக்கொண்ட நிலையில் மீட்புப்படையினரின் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். இச்சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தடப்பள்ளி வாய்க்கால். இந்த பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற 80 வயது மூதாட்டி ஒருவர், வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியில் கீரை பறிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது வாய்க்காலில் இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளுக்கு இடையே மூதாட்டி சிக்கிக்கொண்டார். அந்த பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததால் மூதாட்டி சேற்றில் சிக்கியது யாருக்கும் தெரியாமல் போனது. விடிய விடிய உயிருக்குப் போராடிய நிலையில் அந்த மூதாட்டி இருந்துள்ளார். அடுத்த நாள் காலை அந்த பகுதிக்கு எதேச்சையாக வந்த சிலர் மூதாட்டி சேற்றில் சிக்கிக் கொண்டது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த மீட்புப் படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை பத்திரமாக மீட்டனர். உடனே மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.