சென்னை திருவேற்காடு கோலடி பகுதியில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றிவரும் நிலையில் அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இது மிகப் பழமையான ஏரியாகும். இந்த பகுதியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்றைய தினம் முதல் அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்களை கணக்கிட்டு வருகின்றனர். ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக நேற்றைய தினத்தில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த வீடுகள் மற்றும் குடியேறாமல் இருக்கும் வீடுகள் என மொத்தம் ஏழு வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். இன்று இரண்டாவது நாளாக மீண்டும் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை இடிப்பதற்காக பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது அங்கிருந்த பொதுமக்களை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும், வருவாய்த் துறையினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.