திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றபின் செய்த நான்கு ஆண்டுகால அரசின் திட்டங்களைப் பொதுமக்களுக்குத் திண்ணைப் பிரச்சாரம் வாயிலாக எடுத்துக் கூறவேண்டும். நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் குறைகளைத் தினமும் கேட்டு அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் காய்கறி மார்க்கெட், ஏ.பி.பி. நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் நகரில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் 472 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் ரூ. 3 கோடியில் கட்டப்பட உள்ளது. ரூ.20 கோடியில் பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை 5 மாடிக் கட்டிடத்தில் ரூ. 25 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் கலைஞர் சிலையுடன் கூடிய அலுவலகம் மிக பிரமாண்டமாகக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.