இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு வெளியான போதிலிருந்தே அந்த பகுதியைச் சேர்ந்த ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஏகனாபுரம் பகுதி மக்கள் 764 வது நாளாக தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நிலம் எடுப்பு அறிவிப்பு தொடர்பாக நாளிதழ்களில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
வளத்தூர், பரந்தூர், தண்டலம், இடையார்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் காரணமாக நில எடுப்பு அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது இறுதியாக இன்று நில எடுப்பு அறிவிப்பு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் கிட்டத்தட்ட 152.95 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களுடைய ஆட்சேபனையை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.