இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''அந்தியூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். கூட்டணியைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி என்றைக்கும் சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெளிவுபடுத்தி இருக்கிறேன். குறிப்பாக இன்றைக்கு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிற திமுகவை குறிப்பிட்டு, வாஜ்பாய் அரசில் ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று விளக்கி இருக்கிறேன். கூட்டணியைப் பொறுத்தவரை நான் எந்த குழப்பத்தையும் சொல்லவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இறங்கி பேருந்தில் பயணம் செய்தபொழுது ஒருவர் வேண்டுமென்றே அவரை விமர்சனம் செய்து, கேலியாக கொச்சை வார்த்தைகளில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. காவல்துறைக்கும் இருக்கிறது. காவல்துறை, முன்னாள் முதல்வர் அங்கு வரும்பொழுது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சியினுடைய தலைவர், அதிமுகவை அசைக்க முடியாத கோட்டையாக வளர்த்து வருகிற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இருப்பது இந்த அரசினுடைய மெத்தனப்போக்கு என்பது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதாகவும் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்திருப்பது வேதனைக்குரிய ஒன்று கண்டனத்திற்குரிய ஒன்று. அரசு இதுபோன்ற செயலில் ஈடுபடுவது உண்மையிலேயே வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. எதிர்க்கட்சியினை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுபோன்ற பணிகளை அரசு செய்வது கண்டிக்கத்தக்கது.'' என்றார்.