இந்தியாவில் செயல்படும் ரயில்வே மண்டலங்களில் தென்னக ரயில்வே மண்டலம் மிகப்பெரியது. அதிக லாபத்தை ஈட்டித்தரும் மண்டலமாக தென்னக ரயில்வே மண்டலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையை சீரமைப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களிடம் கருத்து மற்றும் கோரிக்கைகளை கேட்பார்கள்.
அதன்படி தென்னக இரயில்வே ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் உள்ள ரயில்வே துறைக்கான அலுவலகத்தில் செப்டம்பர் 4ந்தேதி நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மக்களவை உறுப்பினர்கள் மதுரை வெங்கடேசன், திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, பெரம்பலூர் பாரிவேந்தர் உட்பட பெரும்பாலான திமுக எம்.பிக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அதிகாரிகளிடம், சாலை போக்குவரத்தில் தமிழ்நாட்டிலேயே சென்னை- திருவண்ணாமலை அதிக வருமானம் ஈட்டித் தருகிறது. திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதந்தோறும் 15லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பௌர்ணமி அன்று வருகை தருகின்றனர். எனவே சென்னை- திருவண்ணாமலை இரயில் சேவையை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய இரயில் பாதை பணிகள் தற்போது நில ஆர்ஜிதப் பணிகள் முடிவுற்ற நிலையில் அடுத்தகட்ட பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும். இத்திட்டம் முழுமையாக மக்களுக்கு பயனடைய வேண்டுமெனில் செங்கம் வழியாக ஜோலார்பேட்டை வரை ரயில் பாதை அமைக்கும் புதிய திட்டம் அறிவிக்க வேண்டும்.
வியாபாரிகள், பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கையான ஹவுரா- புதுச்சேரி அதிவிரைவு வண்டி திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். திண்டிவனம் இரயில்வே கேட் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதாலும், நகரில் இரயில்வே கேட்டை கடக்கும் போதும், அதிக போக்குவரது நெரிசல் ஏற்படுவதால் இரண்டு சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும்.
திருவண்ணாமலை இரயில் நிலையம் மிகவும் மோசமான கட்டமைப்புடன், விளக்கு வசதி, கழிப்பிட வசதி, சிசிடிவி கேமிரா வசதி, மேற்கூரை வசதிகள் இல்லாமல் குறிப்பாக இரயில் நிலையத்தில் பெயர் பலகையே இல்லாமல் உள்ளது. ஆகையால் திருவண்ணாமலை இரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பேசிவிட்டு வந்துள்ளார்.