நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., "சென்னையில் நேற்று (28/01/2022) பறக்கும் படையினரால் ரூபாய் 1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் நேற்று வரை 3,688 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது கூட்டமாக வரக்கூடாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை பரப்புரைச் செய்யக் கூடாது. பிப்ரவரி மாதத்தில் கரோனா வழிகாட்டுதல் படி மீண்டும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குவோம். சென்னையில் நேற்று 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31- ஆம் தேதி வரை பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை" எனத் தெரிவித்தார்.