‘சித்திரை முழுநிலவு நாளின் முதன்மை நோக்கமே சொந்தங்களுடன் கடற்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் கூடி, குடும்பக் கதைகள் பேசி மகிழ்வதுதான்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சித்திரை முழுநிலவு நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்களின் ஒன்று கூடல் நாளான சித்திரை முழுநிலவு நாள் இன்று காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா கொண்டாடப்படுவது இந்த நாளில் தான். மாமல்லபுரத்தில் பல்லவர்களும் சித்திரை முழு நிலவு நாளை மக்களுடன் கொண்டாடியிருக்கிறார்கள். இது கொண்டாட்டங்களின் திருநாள்.
சித்திரை முழுநிலவு நாளின் முதன்மை நோக்கமே சொந்தங்களுடன் கடற்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் கூடி, குடும்பக் கதைகள் பேசி மகிழ்வதுதான். இது நமது பண்பாடு. அந்தப் பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் வாய்ப்புள்ள இடங்களில் சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடுங்கள்.
சித்திரை முழுநிலவு நாளை நம்மை விட சிறப்பாக, எழுச்சியாக கொண்டாட எவராலும் முடியாது. இடையில் தடைபட்ட சித்திரை முழுநிலவு நாளையும், தை முழு நிலவு நாளையும் 2020ஆம் ஆண்டில் கொண்டாடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்ட போது தான் கொரோனா தடுத்து விட்டது.
கொரோனா தடைகள் எல்லாம் இப்போது அகன்றுவிட்ட நிலையில் அடுத்து வரும் தை முழு நிலவு நாளையும், சித்திரை முழு நிலவு நாளையும் வெகு சிறப்பாகவும், அமைதியாகவும் சொந்தங்களுடன் கொண்டாடுவோம். சொந்தங்களின் சந்திப்பில் புத்துணர்வையும், உத்வேகத்தையும் மீண்டும் பெறுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.