Skip to main content

நிலம் கொடுத்தவர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

nlc job appointment letter issued by agriculture minister in chidambaram

 

சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

 

இதில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்துறை இயக்குநர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட என்எல்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில், என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த வகையில் தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்ட இழப்பீடான ஏக்கருக்கு 25 லட்ச ரூபாய்  வழங்கியது திருப்தி அளிப்பதாகவும், என்எல்சியில் உள்ள சொசைட்டி மூலமாக வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வேளாண்துறை அமைச்சர் தகுதி உடைய நபர்களுக்கு பணி வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதனடிப்படையில் கரிவெட்டி, கத்தாழை கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் சுமார் 10 நபர்களுக்கு என்எல்சி சொசைட்டியில் பணி நியமன ஆணையை வேளாண்துறை அமைச்சர் வழங்கினார். இதற்கு விவசாயிகள் வரவேற்று அரசின் இழப்பீட்டு தொகை மற்றும் வேலைவாய்ப்புக்கான பணி ஆணை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என அமைச்சரிடம் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை என்எல்சி நிர்வாகம் தீர்த்து வைத்துள்ளது. தற்போது ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் மற்றும் தகுதியுடைய விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். மேலும், விவசாயிகள் பெரும்பாலும் என்எல்சி சொசைட்டி மூலம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் தற்போது கரிவெட்டி, கத்தாழை கிராமத்தில் உள்ள 10 விவசாயிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் கொடுக்க உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்