கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பிரதமர் அறிவித்த, "ரோஸ்கர் மேளா" திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; நிரந்தரப்படுத்தும் வரை அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும்; என்.எல்.சி நிறுவனத்திற்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வேலைக்குத் தகுந்தார் போல் பணி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் (01.06.2023) இரவு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பதற்காக என்.எல்.சி தலைமை அலுவலகம் நோக்கி நெய்வேலி நகரம் வட்டம் 2லிருந்து ஊர்வலமாகச் சென்ற நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் சாகுல் ஹமீது, ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கேயே சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர், தமிழ்நாடு உழைக்கும் மக்கள் முன்னணி தலைவர் காந்தி, நிர்வாகிகள் லட்சுமணன், சேக்கிழார், கலியமூர்த்தி, அறவாழி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் மாநில நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.
பின்னர் போலீசார் பாதுகாப்புடன் சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர் தலைமையில், தலைவர் அந்தோணி ராஜ், செல்வராஜ் உள்ளிட்ட 5 பேர் என்.எல்.சி தலைமை அலுவலகம் சென்று மனித வளத்துறை பொது மேலாளர் திருக்குமாரிடம் வேலை நிறுத்த அறிவிப்பை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு தலைவர் சேகர், "ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் என்.எல்.சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். 14 ஆம் தேதி நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில் வேலை நிறுத்தம் நடத்துவது குறித்து அறிவிப்பை வெளியிடுவோம்" என்றார்.