அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் நிர்மலாதேவிக்கு, கடந்த 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை ஜாமின் வழங்கியது. இன்று விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவியின் ரத்த உறவான அண்ணன் ரவியும், இன்னொரு குடும்ப நண்பரும் ஜாமின்தாரர்களாக ரூ.10000-க்கு பிணைய சொத்துப் பத்திரங்களை சமர்ப்பித்தனர். அதனை அந்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
விருதுநகரில் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
“இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்ற உத்தரவு மதுரை சிறைச்சாலைக்குச் சென்றுவிடும். அனேகமாக, நாளை மாலை நிர்மலாதேவி சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டதும், உடனே பேட்டி கொடுத்தார் கவர்னர். சந்தானம் கமிட்டியையும் உடனே அமைத்தார். பொள்ளாச்சி பயங்கரத்தை மனித இதயம் படைத்தவர்கள் யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், கவர்னர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை; கேட்கவில்லை. கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நிர்மலாதேவி விஷயத்தில் அக்கறை எடுத்த கவர்னர், உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் பொள்ளாச்சி விஷயத்தில் ஏன் அக்கறை காட்டவில்லை?
பொள்ளாச்சியா? எடப்பாடி ஆட்சி பொல்லா ஆட்சியா? பொல்லாத ஆட்சி என்பதற்கு சாட்சியாகத்தான் நடந்திருக்கிறது பொள்ளாச்சி சம்பவம். கவர்னர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா? இதிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். நிர்மலாதேவி வழக்கு பொய் வழக்கு என்பதற்கு இதைவிட சாட்சி எதுவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறோம். நிர்மலாதேவி வழக்கு பொய் வழக்கென்று. அவர் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் சொன்னோம். பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம்?
அந்த நேரத்தில், மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தார் நிர்மலாதேவி. அதனால், கவர்னர் தலையிட்டார் என்றார்கள். இப்போது, துணை சபாநாயாகர் மேலேயே குற்றச்சாட்டு இருக்கிறதே? ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு இருக்கிறதே? கவர்னர் ஏன் அமைதியாக இருக்கிறார்? கவர்னர் எல்லாருக்கும் பொதுவானவர்தானே? அவர் மீது குற்றச்சாட்டு வந்தால்தான் பேசுவாரா? அப்போது சந்தானம் கமிட்டி அமைத்தார் அல்லவா? இப்போது பொள்ளாச்சி சம்பவத்துக்காக ஒரு கமிட்டி அமைக்க வேண்டியதுதானே? உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதற்காக ஏன் வேகவேகமாக குண்டாஸ் போட்டார்கள்? உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதுதான் எடப்பாடி அரசின் வேலையாக இருக்கிறது. அதற்கு ஒத்தூதுவதுதான் கவர்னருடைய வேலையாக இருக்கிறது. மத்திய சர்க்காரின் வேலையாக இருக்கிறது என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.” என்றார் ஆதங்கத்துடன்.
எடப்பாடி ஆட்சியில் என்ன நடந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பது தமிழக மக்களின் குமுறலாகவும் இருக்கிறது.