பயங்கரவாதிகளுடன் தொடர்பு, நிதி திரட்டுதல் மற்றும் ஆள் சேர்த்தல் போன்ற சட்டவிரோத செயல்களில், பிஎப்ஐ அமைப்பினர் ஈடுபட்டதாக கூறி, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மொத்தம் 15 மாநிலங்களில், 90க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையால், பிஎப்ஐ எனும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சி மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டன. இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தமிழகத்தின் சென்னை, மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், மதுரை மாவட்டம் மாநகர் பகுதியில் உள்ள ஹாஜிமார் தெருவைச்ச சேர்ந்தவர் முகம்மது தாஜுதீன். 30 வயது மதிக்கத்தக்க இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகம்மது தாஜுதீன் கடந்த பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பீகாருக்கு பயணம் மேற்கொண்டபோது சந்தேகத்துக்குரிய சிலரை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் மதுரையில் இருக்கும் தாஜுதீனுடன் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, மதுரைக்கு விரைந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் தாஜுதீனின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மதுரையின் மிக முக்கிய வீதியான ஷாஜிமா தெரு மதுரை காவல்துறை மற்றும் என்ஐஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்காத நிலையில், தாஜுதீனை கைது செய்து மதுரை மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாஜுதீனுக்கு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லக்னோ, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாக விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தாஜுதீனிடம் நடத்தப்பட்ட இரண்டு மணி்நேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இத்தகைய சூழலில், அங்கு கூடியிருந்த ஏராளமான இஸ்லாமிய மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட தாஜுதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் இதுவரை பீகாருக்கு சென்றதே இல்லை. ஆனால்,என்.ஐ.ஏ அதிகாரிகள் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தி என்னுடைய செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதே சமயம், அதிகாலையில் இருந்து மதுரையில் புகுந்து தொடர் சோதனைகளை ஈடுபட்டுவந்த என்.ஐ.ஏ அதிகாரிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.