நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அண்மையில் திருமண தம்பதிகள் திருமணமான கையோடு மணமக்கள் கோலத்தில் தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவது இணையத்தில் ட்ரெண்டாகிது. அதேபோன்று திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் புதுமண தம்பதி திருமணமான கையோடு கலந்து கொண்டனர்.