சென்னை ஓமந்துரார் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சார் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் 2015ஆம் ஆண்டு அனுப்பியது.ஆணையம் அமைக்கப்பட்டப உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும், விளக்கமளிக்க கோரிய சம்மனுக்கு 2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகினார், மனுதாரரான திமுக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விளக்கம் பெற வேண்டும். ஆதலால், வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும். தடையை நீக்க கோரும் கூடுதல் மனு மீது மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து மெமோ தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் கூடுதல் மனுவை மட்டும் விசாரிப்பதாக ஏற்றுக்கொண்ட நீதிபதி, திங்கட்கிழமை ஒத்திவைக்க மறுத்துவிட்டார். மேலும், மனுதாரர் கருணாநிதி உடல்நிலை சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவர் நன்கு குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிராத்தனை செய்கிறோம். அதே நேரத்தில் வழக்கை எத்தனை ஆண்டுகள்தான் தேவை இல்லாமல் நினைவில் வைத்திருப்பது. மக்களின் பணம் வீணடிக்கக் கூடாது என்ற அக்கரையில் தான் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் நினைக்கிறது என நீதிபதி தெரிவித்தார்.
அதன்பின்னர் நாளை அகஸ்ட் 3ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைத்த நீதிபதி . தடையை நீக்கக்கோரி ஆணையம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்படும், அரசுத் தரப்பு வாதங்களை முடித்த பிறகு, நாளையே திமுக தரப்பில் வாதங்களை முடிக்கவில்லை என்றாலும் இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் . நாளை விசாரணை நடக்கும், யார் வந்தாலும் வராவிட்டாலும் நீதிமன்றம் சட்டப்படியான கடைமையை செய்யும் என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் திட்டவட்டமாக தெரிவித்தார்.