திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் தணிக்கை செய்வதற்காக திருச்சி மாநகரத்தின் எல்லையில் ஏற்கனவே 9 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருப்படுகிறது.
எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் ஏற்கனவே காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், திருச்சி காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி-மதுரை செல்லும் தேசியநெடுஞ்சாலை, புதுக்கோட்டை-திருச்சி செல்லும் சுற்று வட்ட சாலை அருகில் உள்ள எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூர் நான்கு ரோடு சந்திப்பில் காவல் சோதனை சாவடி எண்.2 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது.
இதனைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட இடத்தில் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கேமராக்கள் 2, சி.சி.டி.வி கேமராக்கள் 4 மற்றும் பொது முகவரி அமைப்பு ஒலிப்பெருக்கிகள், சூரிய மின்சார விளக்குகளுடன் கூடிய இரும்பு தடுப்பான்கள், தடையில்லா மின்சார வசதி மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அதிநவீன காவல் சோதனை சாவடியின் புதிய கட்டடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர், துணை காவல் ஆணையர் (தெற்கு), கண்டோன்மெண்ட் காவல் சரக உதவி ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர்.