தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், இரு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுவதாக முடிவெடுத்த நிலையில், "நாங்குநேரியில் நாங்களே நிற்போம்.!" என திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ் கட்சி அதிரடியாக தீர்மானத்தை இயற்றியுள்ளதால் கூட்டணிக்குள் கலகம் பிறந்திருக்கின்றது.

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் நாங்குநேரியின் சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமார், கன்னியாகுமரிப் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார். 1996, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 5- ஆவது முறையாக கூட்டணிக் கட்சிக்காக மட்டும் இத்தொகுதியை ஒதுக்கி வந்த திமுகவோ, இந்த முறை கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு தொகுதியினை விட்டுத்தராமல் 1991- க்கு பிறகு இந்த முறை தாங்களே நேரடியாக போட்டியிடுவுள்ளதாக தகவல் கசிந்தது. இத்தொகுதியில் திமுக இளைஞரணிப் போட்டியிடலாம் என உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்குப் போட்டியாக திமுகவே களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நெல்லை மாவட்ட செயல்வீரர்களுக்கானக் கூட்டம் நாங்குநேரி ரயில் நிலையம் அருகிலுள்ள சுப்புலட்சுமி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய கருத்தைத் தெரிவித்த நிலையில், கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியோ, " தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடி, அதனை மேலும் பலத்தபடுத்தவே இந்த கூட்டம்.

நாம் 50 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருப்பது ஏன்? கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி பலம் இருந்தும் கூட ஏன் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? கூட்டணி இன்றி வெற்றி பெற முடியாதா என்பதற்காக தான் இந்த கூட்டம்" என காங்கிரஸ் இத்தொகுதியில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நேரடியாகவே தெரிவித்தார். ஏறக்குறைய திமுக இந்த தொகுதியில் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே.எஸ்.அழகிரியின் கூட்டணிக்குள் கலகம் விளைவிக்கும் பேச்சு என்பது பல அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.