Skip to main content

திரைகடல் ஓடியும் மணமகள் தேடு! ஸ்வீடன் பெண்ணை மணந்த நாமக்கல் பொறியாளர்!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

ஒரு காலத்தில், 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றார்கள். ஆனால், அண்மைக் காலங்களில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர், பிழைப்புக்காக வெளிநாடு சென்றாலும், அங்கேயே தனக்கான வருங்கால துணையைத் தேடிக்கொள்வதிலும் தணியாத ஆர்வம் காட்டுகின்றனர். கற்பனைக்கு எப்படி கடிவாளம் போட முடியாதோ, அதுபோல் காதலுக்கு எல்லைகளும் வரையறுக்க முடியாது. அண்மைக் காலங்களாக தமிழக இளைஞர்கள், வெளிநாட்டுப் பெண்களை மணம் முடிப்பதில் காட்டும் ஆர்வமும், நிகழ்வுகளும் அதைத்தான் கூறுகின்றன.

 

Namakkal engineer married Sweden woman

 



இதுபோன்ற இருநாட்டு கூட்டு திருமண ஒப்பந்தங்களுக்கு இரண்டே இரண்டு நுழைவு வாயில்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களின் மூலமாக ஆண், பெண் துணையைத் தேடிக்கொள்வது; இரண்டாவது, இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடியோ அல்லது படிப்பதற்கோ செல்லும்போது காதல் வயப்பட்டு திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்துவது. ஆனால், எல்லா காதல்களுக்கும் கண்கள்தான் நுழைவாயிலாக இருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுடைய மகன் தரணி. எம்.டெக்., எம்.எஸ்., படித்துவிட்டு ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எம்.எஸ்., பட்டமேற்படிப்புக்காக ஸ்வீடன் சென்றிருந்தார். ஓய்வு நேரங்களில், அங்குள்ள நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் விளையாடச் சென்ற இடத்தில்தான் தரணி, ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த மரினா சூசேன் என்பவரைச் சந்தித்தார்.

 

Namakkal engineer married Sweden woman

 



மரினாவை பார்த்த முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் தீ பற்றிக்கொண்டது. ஆனாலும், மரினா சூசேனிடம் தான் காதல் வயப்பட்டது குறித்து அப்போதைக்கு வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவர் படித்து முடிக்கும் வரை இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தனர். இந்நிலையில் அங்கேயே ஒரு தனியார் நிறுவனத்தில் தரணிக்கு நல்ல வேலையும் கிடைத்தது. 

நட்பு என்ற கட்டத்தை முறியடிக்க நினைத்த தரணி, ஒருநாள் மரினா சூசேனிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். அவருக்கும் உள்ஓரத்தில் தரணி மீது காதல் இருந்திருக்கும்போல. அவரும் உடனடியாக தரணியின் காதலை ஏற்றுக்கொண்டார். மரினாவின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட, காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர். இதுகுறித்து தரணி, தன் பெற்றோரிடமும் பேசி, ஸ்வீடன் காதலியை மணக்க சம்மதம் பெற்றுவிட்டார். மரினா சூசேன், கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இருதரப்பு பெற்றோரும் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தனர். திருமணத்தை இரண்டு தமிழ் மற்றும் கிறித்தவ சம்பிரதாயங்களின்படி ஒரே நாளில் நடத்திவிட வேண்டும் என்பதுதான் அது. அதற்கு மணமக்கள் இருவருமே ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து தரணி - மரினா சூசேன் ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இதையடுத்து, ஸ்வீடன் பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி, திருச்செங்கோட்டில் தரணியுடன் வெள்ளிக்கிழமை (பிப். 8) திருமணம் நடந்தது. பாரம்பரிய முறையில் மணமகன் வெள்ளை நிறத்தில் பட்டு வேட்டி, பட்டு சட்டையும், ஸ்வீடன் நாட்டு பெண் பட்டுச்சேலையும் அணிந்து இருந்தனர். 

தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தாலும், அதைத்தொடர்ந்து கிறித்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. இதில் மணமகன் உறவினர்கள் மட்டுமின்றி மணப்பெண் தரப்பில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு, அவர்களை அட்சதை தூவி வாழ்த்தினர். மணப்பெண் தரப்பில் வந்திருந்த உறவினர்கள், தமிழ் மரப்புப்படியான திருமண சடங்குகளை பெரிதும் ரசித்ததுடன், வீடியோவிலும் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்