முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் மே 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மீதமுள்ளவர்களும் விடுதலை ஆகச் சட்டத்தில் வழி ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் முடிவிற்குத் தமிழக அரசு கட்டுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை அடுத்து மீதமுள்ள ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் விடுதலை கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் ஐந்து பேரின் வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனு மீதான விசாரணையைத் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.