
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென மாயமான சிறுமி இன்ஸ்டா ரீல் மூலம் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
சென்னை சூளமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்த சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமி இருந்த போதே அவர் திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் அவரை தேடி வந்தனர்.
இன்ஸ்டாகிராம்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் கொண்ட அந்த பெண் ஏற்கனவே சமூக வலைதள வீடியோ மூலம் பிரபலமடைந்த மற்றொரு பெண்ணுடன் வீடியோ பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருந்த அந்த பெண்ணை மீட்டனர். அந்த சிறுமியை மீட்ட காவல் துறையினர் அறிவுரை கூறி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பெண்கள் காப்பகத்தில் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவரது தந்தையிடம் சிறுமி பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.