காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாக போராட்டம் நடத்தினர். பல்வேறு அமைப்புகளும் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் புதுச்சேரி அரசு மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை அமைத்து சிறுவன் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஆணையிட்டது.
மேலும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு இன்று காலை தங்களது அறிக்கையை மருத்துவத்துறை இயக்குனரிடம் சமர்ப்பித்தனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய அறிக்கை இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் வீட்டை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவில் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரி லோகேஸ்வரன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டின் முன்பகுதி முழுதும் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.