2 வருஷமாக இங்க வந்து டீ, மிக்சர் மட்டும்தான் சாப்பிட்டு போறேன். என்னோட வீட்டுக்கு எப்போங்க குடிநீர் குழாய் இணைப்பு தருவிங்க... என கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலரின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியன் கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய தலைவர் லதா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி, துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த 7 ஆவது வார்டு கவுன்சிலர் ருக்மணி என்பவர் பேசும்போது '' ராஜகம்பீரம் ஊராட்சியில் நான் வசிக்கும் வீட்டிற்குக் குடிநீர் குழாய் இணைப்பு வேண்டிக் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் கோரிக்கை வைத்து வருகிறேன். அதற்கான ரசீதையும் முறையாகச் செலுத்தியுள்ளேன். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.
இதனையடுத்து, கிராமத்து பாணியில் பேசிய ருக்மணி '' நாங்கள் என்ன நீங்கள் கொடுக்கும் டீ, மிக்சர் சாப்பிட்டு கையெழுத்து போட்டுவிட்டு செல்வதற்காகவா வந்து செல்கிறோம்?. இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள்” என கவுன்சிலர் கூட்டத்தில் சலசலப்பை உண்டாக்கினார். அப்போது, எதிர்த்திசையில் இருந்த சேர்மன் பேச கவுன்சிலருக்கும் சேர்மேனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் கவுன்சிலர் ருக்மணியின் மகன் திடீரென உள்ளே வந்து அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் “சம்பந்தம் இல்லாதவர்கள் உள்ளே வந்து பேச அனுமதி இல்லை” என்று கூறவே... இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது அதிமுக கவுன்சிலர் ருக்மணி பேசும்போது '' என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், எனது மகன் கூட்டத்திற்கு அப்படித்தான் வருவான். எனது இருக்கையில்தான் அமருவான்” எனத் தெரிவித்தார்.
அப்போது, அவரது பேச்சுக்கு திமுக கவுன்சிலர் அண்ணாதுரை எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனையடுத்து கூட்டத்திலிருந்த அதிமுக கவுன்சிலர்கள் வெளி நடப்புச் செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.