தேனியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளைப் பார்த்து, எச்சரிக்கை அறிவிப்பு 140 அடி வந்தால் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் 134 அடி நிரம்பியதும் ஏன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். மேலும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கூட எவ்வித தகவலும் சொல்லாமல் பொதுப்பணித்துறை தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என குற்றஞ்சாட்டினார்கள். அவர்களை கலெக்டர் முரளிதரன் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதையேற்காத விவசாயிகள், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்ததற்கு ஒத்துழைத்த தமிழக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் விவசாயிகள் பேசும்போது... ''தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை 90 சதவிகிதம் தாரைவார்த்து விட்டனர். அங்கிருக்கும் 3 அதிகாரிகளை மட்டும் அழைத்துக் கொண்டால் முழுவதும் அணை அவர்களின் வசம் சென்றுவிடும். 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள அணைக்கு 126 ஆண்டுகள் கடந்துள்ள போதே இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசு உரிய உத்தரவிடாமல் இதுபோன்ற செயல்களில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதைக் கருப்பு நாளாகப் பார்க்கிறோம்.
தமிழகத்தில் இருந்து யாரையும் அழைக்காமல் அமைச்சர், எம்எல்ஏக்கள், இடுக்கி ஆட்சியர் என மொத்தம் 150 பேர் அணை திறப்புக்குச் சென்றுள்ளனர். ஆனால் தேனி கலெக்டர் சாதாரண நாட்களில் கூட சென்று பார்வையிட முடியாத நிலை உள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கையால் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படவுள்ளது. இதைத் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு ஆண்மையற்றதாக உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் கூட இவ்விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. விவசாயிகள் மட்டுமே போராடி வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத் தொடர் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறினார்கள்.