முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கத்தால் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக 112 அடியில் இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி 113 அடியாக உயர்ந்தது அதன்பிறகு ஜூலை 22ஆம் தேதி மேலும் ஒரு அடி உயர்ந்து, 114 அடியாக காணப்பட்டது. தற்போது இன்று காலை 115.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,745 மில்லி கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 92 அடியாக உள்ளது. அங்கிருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3.51 கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.7 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 63.8 கனஅடியாகவும் திறப்பு 3 கனஅடியாகவும் உள்ளது.
கடந்த 5 மாதங்களாக மழை இல்லாததால் நீர் வரத்து இல்லாமல் காணப்பட்ட நிலையில் தற்போது பெய்துள்ள பருவ மழையால் அரிசி பாறை - பாறை ஓடைகள் மூலம் கடந்த வாரம் சுருளி அருவிக்கு நீர்வரத்துத் தொடங்கியது.
அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இருந்தபோதும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லாத சுருளி அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.