
வன்னியர் சமூகத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கடந்த வாரம் பா.ம.க சாலை மறியல் போராட்டம் நடத்தியது. இதில், பல்வேறு இடங்களில் சாலை தடுப்புகளைச் சேதப்படுத்தியதாகவும் ரயில்மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது. ஆனாலும், அவர்களின் போராட்ட முறைக்கு மாற்றுக் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, கடுமையாக விமர்சித்துத் தங்களது அறிக்கைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில், முக்குலத்துப் புலிகள் கட்சியின் தலைவர், ஆறு.சரவணன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்து, அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "தமிழக அரசை, சீர்மரபினர் நாடோடிகள் கணக்கெடுப்பை டிசம்பருக்குள் நடத்தி புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, வலியுறுத்தியுள்ளது. இதனை, தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, இந்தக் கணக்கெடுப்பின் படி, அனைத்து மாநிலத்திலும் உள்ள சீர்மரபினர் பட்டியலில் உள்ள மக்களுக்கு இட ஒதிக்கீடும் நலத்திட்டங்களும் அந்தந்த மாநில அரசு மூலம் செய்ய நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தை முக்குலத்துப் புலிகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
ஆங்கிலேய அரசின் பல்வேறு அடக்குமுறைகளைச் சந்தித்துப் பல இன்னல்களுக்கு ஆளான சமூக மக்கள், முன்னேற்றப் பாதையில் செல்லவும், கல்வி வேலை உள்ளிட்டவற்றில் முன்னேறவும் மத்திய அரசின் இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசு இதில் எந்த ஒரு அரசியல் நிர்பந்தங்களுக்கும் ஆளாகிவிடாமல், ஏற்கனவே எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இந்தப் புதிய பட்டியலை சரிபார்த்து, யாரும் விடுபடாமல் பட்டியலைத் தயாரித்து அனுப்பி, மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற்று வழங்குமாறு முக்குலத்துப் புலிகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது, இட ஒதுக்கீட்டில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று சென்னையில் போராட்டம் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக வன்முறை, போராட்டம் என்று தமிழக அரசை மிரட்டிப் பார்க்கும் செயலாக டாக்டர்.ராமதாஸ் நடந்துகொள்வது மிகவும் கண்டனத்துக்குரியது. ஒரு மூத்த அரசியல்வாதி இதுபோல அடுத்தவர்களுடைய சலுகையைத் தட்டிப் பறிக்கப் பார்ப்பது, அநாகரிகமான அரசியலாகும். இதை, முக்குலத்துப் புலிகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.
"இந்த அறிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கும் மக்களிடையேயும் கொண்டு செல்லப் போவதாகவும், இட ஒதுக்கீட்டை மிரட்டிப் பெற பார்த்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்கிறார் முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவர், ஆறு.சரவணன்.