களப்போராளி தோழர் முகிலன் எங்கே இருக்கிறார்? காவல்துறை வேகமாக செயல்பட்டு உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் - அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - உயிர்ப்பலிகள் -அதன் பின்னணி குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவரும், களப்போராளியுமான தோழர் முகிலன் அவருக்குத் தெரிந்த சில உண்மைகளை வெளியிட்டார். (15.2.2019) அவ்வாறு வெளியிட்ட அந்த நாள் முதல் தோழர் முகிலனைக் காணவில்லை. அவர் உயிரோடுதான் இருக்கிறாரா, இல்லையா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
காவல்துறை இந்த விஷயத்தில் எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை. இப்பொழுதுதான் சிபிசிஅய்டிக்கு- விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை சாதாரணமானது அல்ல. களப் போராளியாக இருந்து சமுக பிரச்சினையின் மீது அக்கறை கொண்டு ஒருவர் பொதுத் தொண்டில் ஈடுபட்டால் இதுதான் நிலை என்றால் இதை விட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற அய்யத்தையும் இது ஏற்படுத்துகிறது.
அவரை உயிரோடு மீட்டுக் கொண்டு வருவது அரசின் - காவல்துறையின் கடமையாகும். இத்தனை நாள்கள் கழிந்ததே அவமானகரமானது. காவல்துறை வேகமாக செயல்படட்டும்! இவ்வாறு கூறியுள்ளார்.