கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்ட பகுதிகளில் உள்ள தெற்கு மாங்குடி, முள்ளங்குடி, நந்திமங்கலம், காட்டுக்கூடலூர், வையூர், கூத்தன் கோயில், கடவா சேரி, உசுப்பூர், பரங்கிப்பேட்டை, வெள்ளூர், லால்பேட்டை, ஆட்கொண்ட நத்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2016- 2017 மற்றும் 2017- 2018ம் ஆண்டில் இப்பகுதியில் உள்ள விவசாய பாசன வாய்க்கால்களில் சரியான தண்ணீர் வராததால் பயிர்கள் காய்ந்து கடுமையான வறட்சி பாதித்தது.
இதுவரை சரியான முறையில் வறட்சிக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும். ஏக்கருக்கு பயிர் காப்பீட்டுத் தொகை ரூ 27 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோசங்களை எழுப்பினர்.. பின்னர் விவசாயிகள் சார் ஆட்சியரின் உதவியாளரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் முற்றுகை போராட்டம் நடத்தியதையொட்டி சிதம்பரம் காவல்துறையினர் விவசாயிகளை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். விவசாயிகளை கைது செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.