சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றோடு 28 நாட்கள் ஆகிவிட்டது. போலீஸ் விசாரணை என்பது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என ஆதங்கபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு தலைமையில், சென்னையில் கடந்த வாரம் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. கோவை, புதுச்சேரி போன்ற இடங்களிலும் முகிலனை தேடி கண்டுபிடிக்க கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், முகிலனை பற்றிய எந்த தகவலும் அரசாங்கத்திடம் இல்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, 'முகிலன் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டால் அவரை எப்படி தேடிக் கண்டுபிடிக்கமுடியும்'? என்றார்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார், துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதில் முகிலனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர் பிப்.15-ந் தேதி காணாமல் போய்விட்டதாகவும், அவரை பற்றிய தெரிந்தால் தகவல் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டிபேன், முகிலனை ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் பிப்.18-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, தேடிக் கொண்டிருக்கிறோம். துண்டு பிரசுரம் எல்லாம் வெளியிட்டிருக்கோம். எல்லா காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்திருக்கோம் என்று நீதிமன்றத்திற்கு சொல்வதற்கு தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது சிபிசிஐடி போலீஸ் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.