Skip to main content

முகிலன் எங்கே? காவல்துறை தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 

கூடங்குளம் அணு உலை, காவிரி படுகையில் மணல் கடத்தல், கனிம வளங்கள் கடத்தல், மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை போன்றவற்றுக்கு  எதிராக போராட்டம் நடத்தி வந்தது தொடர்பாக, கடந்த 2017-ல் கைது செய்யப்பட்ட சூழலியல் போராளி தோழர் முகிலன் ஒரு வருடத்துக்கும் மேலாக  சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.


 

mugilan



சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானவர்களுக்காக  தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
 

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் இருவரும்தான் என்றும், காவல்துறை ஸ்டெர்லைட் வேதாந்தாவின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் அண்மையில் வீடியோ ஆவணங்களை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் (பிப்.15) வெளியிட்டார்.
 

மேலும், அத்தனை ஆவணங்களையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
 

தொடர்ந்து அந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு அன்றிரவு சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வதாக திட்டமிட்டிருந்த முகிலனை இரவு முதல் காணவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. 4 நாள் ஆகியும் அவர் குறித்த தகவல் எதுவும் இல்லை.
 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போயிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆவணங்களை வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்துள்ளதா அல்லது வேதாந்தா நிறுவனம் கடத்தி வைத்துள்ளதா என்பன போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
 

 ஆகவே, தோழர் முகிலன் எங்கு இருக்கிறார் என்பதை காவல்துறை தெளிவுப்படுத்த வேண்டும். அவரை கண்டறிந்து அவர் குடும்பத்தினருக்கும், தமிழக மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்