ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள கிராமம் தொட்டமுதுகரை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ். இவரது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அதில் சென்ற ஒருவாரகாலமாக கரும்புகளை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கரும்பு பயிரில் உள்ள தோகைகளுக்கு நடுவே இரண்டு சிறுத்தை குட்டிகள் ஒன்றோடொன்று விளையாடிக்கொண்டிருந்தது. பார்க்க பூனைக்குட்டி போல் இருந்தது.
கரும்பு தொழிலாளர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாயி தங்கராஜ் உடனடியாக அருகே உள்ள ஜூரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிறுத்தை குட்டிகள் இருந்த இடத்திற்கு வந்த வனச்சரகர் காண்டீபன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகளை மீட்டனர். பூனை கூட்டி அன்பாக விளையாடுவது போல் இவைகளும் விளையாடியது. தாய் சிறுத்தை எங்காவது பதுங்கியிருக்கிறதா என்பதை அப்பகுதி முழுக்க தேடினார்கள். தாய் சிறுத்தை இருப்பிடத்தை அறிய முடியவில்லை. பிறகு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்று தகவல் கேட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறை உயர் அதிகாரிகள் அந்த இடத்தில் கண்கானிப்பு கேமராவையுங்கள் உறுதியாக தாய் சிறுத்தை வர வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள். கரும்பு வெட்டும் பணியை நிறுத்துமாறு கூறிவிட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தினார்கள் பிறகு வனத்துறை ஊழியர்கள் தங்களுக்கு பாதுபாப்பு கருவிகளோடு அந்த சிறுத்தை குட்டிகளை அதே கரும்பு தோட்டத்தில் விட்டு மதியம் முதல் இரவு வரை காத்திருந்தனர் கரும்பு தோட்டத்தில் சிறுத்தைகுட்டிகள் இருந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாமல் தடுத்தனர்.
அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் இயங்க தொடங்கியது. இரவு 7.58 மணியளவில் ஒரு பெரிய சிறுத்தை பவ்வியமாக மெல்ல மெல்ல முன்னோக்கி வந்தது. அதுதான் தாய் சிறுத்தை. கரும்பு தோட்டத்தில் தனது குட்டிகளை விட்ட இடத்தில் தேடியது. குட்டிகள் இடம் மாறி இருந்தது. கண்களில் கோபம் கொப்பளிக்க தான் ஈன்ற குட்டிகளுக்கு என்ன நடந்ததோ என்ற அபாய ஏக்கத்தில் உஷ்...உஷ்... என்ற பெருமூச்சுடன் ஒரு விதமான (அதாவது தாய் பூனை குட்டிகளை அழைப்பது போல்) சத்தமிட்டது. தாயின் அழைப்பை கேட்ட சிறுத்தை குட்டிகள் கரும்புக் காட்டுக்குள் மேலும் கீழும் குதித்தது. தாய் சிறுத்தை குட்டிகளை கண்டு விட்டது. தாய் பாசத்துடன் அங்கு வந்த தாய் சிறுத்தை குட்டிகளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியதோடு பசியால் இருந்த தனது குட்டிகளுக்கு பாலூட்ட தொடங்கியது. இரு குட்டிகளும் பசியாறிய பிறகு மேலெழுந்து நின்று சுற்றுப் புறம் முழுக்க பார்வையால் அளந்தது. அதன் பிறகு தனது இரு குட்டிகளையும் வாயில் கவ்வி தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றது.
நமது குடியுரிமை காடு தான், நாடு அல்ல என்பதை தனது இரு குட்டிகளோடும் சொல்லாமல் சொல்லிச் சென்றது தாய் சிறுத்தை.
இது ஒருபுறம் இருக்க நாங்கள் வாழும் பகுதியில் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்பது போல்
அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட வாய்ப்புள்ளதால் இரவில் யாரும் நடமாட வேண்டாம் என வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.