Skip to main content

பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

money incident in kallakurichi

 

கள்ளக்குறிச்சி  நகரில் தியாகதுருகம் சாலையில் வசிப்பவர் மணி. இவருடைய மனைவி அருட்செல்வி. அருட்செல்வி விழுப்புரம் குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

 

அந்தப் புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார். அதே பகுதியில் அவர் வசித்ததால் ஏற்கனவே செந்திலுடன் எனக்கு அறிமுகம் இருந்தது. நட்புரீதியாக எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் செந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் ஜாகீர் என்கிற தீன்பாய் மற்றும் நெல்லை மாவட்டம் பெருமாள்பட்டியைச் சேர்ந்த முருகன் ஆகியோருடன் சேர்ந்து பெரிய அளவில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்து வருவதாகவும் கூறினார்.

 

தற்போது அந்தத் தொழிலில் அதிக அளவில் பணம் முதலீடு செய்து உள்ளதால், தொழிலுக்குத் தற்போது பணத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் உதவி செய்தால், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பு மடங்கு பணத்தைத் திருப்பித் தருவேன் என்று செந்தில் உறுதி கூறினார். செந்தில் வார்த்தையை நம்பி, நான் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தேன். ஆனால், நாட்கள் சென்றதே தவிர பணத்தை இரட்டிப்பாக்கியும் தரவில்லை, கொடுத்த அசல் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

 

செந்தில் என்னை ஏமாற்றி வருகிறார். அவர் மீது நம்பிக்கை வைத்துப் பணத்தைக் கொடுத்தேன். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனக்குப் பணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அருட்செல்வி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரையடுத்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜாகீர் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள செந்திலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளம்பெண்ணிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி கோடிக் கணக்கில், பணத்தை மோசடி செய்த மூவரின் செயல் வெளியுலகத்திற்குத் தெரியவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்