அடுத்த மாதம் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற இருக்கிறது. இந்த யாத்திரை தொடர்பாக பா.ஜ.க வெளியிட்டுள்ள முன்னோட்ட வீடியோவில் 'பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா'' என்ற வரி இடம்பெற்று இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறுகையில்,
எம்.ஜி.ஆர் நல்லதுதான் செய்திருக்கிறார். அவரைப்போலவே மோடியும் அவரது வழி நல்லது செய்து கொண்டிருக்கிறார். எப்படிப் பெண்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் ஆதரவான நிலையில் இருந்தாரோ அதேபோல் தான் மோடியும் தற்பொழுது பெண்கள் மத்தியில் ஆதரவாக உள்ளார் என பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதற்குக் கருத்துத் தெரிவித்துள்ள அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளர் வைகைச்செல்வன், எம்.ஜி.ஆர் புகைப்படத்தைப் பயன்படுத்த முழு உரிமை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.கதான். எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார்.