Skip to main content

பிரதமரிடம் பேசும் துணிச்சல் முதலமைச்சருக்கு இல்லை: மு.க.ஸ்டாலின் 

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
mkstalin


காவிரி விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசும் துணிச்சல் முதலமைச்சருக்கு இல்லை” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.  
 

செய்தியாளர்: முதலமைச்சர் டெல்லிக்கு நேரில் சென்றும் காவிரி விவகாரம் குறித்து பேசவில்லையே?
 

மு.க.ஸ்டாலின் : “முதலமைச்சர் டெல்லி செல்கிறார், பிரதமரை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசவிருக்கிறார்”, என ஊடகங்களில் இரு தினங்களாக தலைப்புச் செய்திகளாகவும், பிரேக்கிங் நியூஸ் என்றும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டீர்கள். அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை, ஒருவேளை அவருக்கு மட்டும் நேரம் கேட்கப்பட்டு, பிரதமரை சந்தித்து, காவிரி விவகாரம் பற்றி பேசப்போகிறார் என்று நாங்களும் எதிர்பார்த்தோம். 


ஆனால், இன்று காலை, காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்கவில்லை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசியபோது கூட, அதற்காக நான் செல்லவில்லை, பிரதமரிடம் இதுகுறித்து நான் பேசவில்லை, என்று தெரிவித்தார். அதோடு, மகாத்மா காந்தி பிறந்தநாளை விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருக்கிறார் என்ற செய்தி மட்டுமே ஊர்ஜிதமாகி இருக்கிறது. 
 

ஒருவேளை, பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தாலும், காவிரி விவகாரம் குறித்து அவர் நிச்சயமாக பேச மாட்டார். அந்தளவுக்கு அச்சமும், பயமும் உள்ளது. தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மோடி அவர்களின் காலில் விழும் வாய்ப்பாகவே அதை பயன்படுத்துவாரே தவிர, காவிரிப் பிரச்சினை குறித்து பேசவும் மாட்டார், பேசவும் முடியாது. பேசும் அளவுக்கு தைரியமும், தெம்பும் அவருக்கு இல்லை. 
 

செய்தியாளர்: குட்கா விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் செயல்பட்ட குட்கா ஆலையில் திமுகவுக்கு தொடர்பு இருக்கிறது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்து இருக்கிறாரே? 
 

மு.க.ஸ்டாலின் : யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொல்லி இருப்பதை நான் வரவேற்கிறேன். டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நியாயமாக, அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, இந்த வார்த்தையை சொல்லியிருந்தால், அமைச்சர் ஜெயகுமாருக்கு தனியாக பாராட்டு விழா நடத்த நான் தயாராக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் மீது, அனுமதி கொடுத்ததாக அபாண்டமான ஒரு பழியை சொல்லி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்திருக்கிறார்கள். ஆனால், குட்கா ஆலைக்கு ஊராட்சி தலைவர்களால் அனுமதி கொடுக்கவே முடியாது. கட்டிடங்கள் கட்டுவது, நிலம் ஒதுக்கீடு செய்வது போன்ற அனுமதிகளை அவர்கள் வழங்க முடியுமே தவிர, குட்கா விற்பனை செய்ய அனுமதி கொடுக்க முடியாது. குட்கா விற்க அனுமதி கொடுத்திருப்பது அமைச்சர் விஜயபாஸ்கரும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தான். எனவே, நியாயமாக அவர்கள் மீதுதான் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்திருக்க வேண்டும். 
 

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறாரே? 
 

மு.க.ஸ்டாலின் : மத்திய அமைச்சராக இருக்கும் அவர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றுகின்ற இடத்தில் மத்திய அரசு இருக்கிறது. அதை செய்ய வேண்டுமே தவிர, மத்திய அரசுக்கு பொறுப்பில்லை என மத்திய அரசில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர், பொறுப்பில்லாமல் சொல்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்