ஆம்பூரில் ஒற்றை மனுஷியாக பேருந்தை மறித்து கெத்து காட்டிய 60 வயது பெண்மணியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்திற்கு தமிழக வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகராமக நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் நேற்று மூடப்பட்டு காணப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்தன.
இந்தநிலையில், நேற்று காலை திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு சென்ற அரசு அதிவிரைவு பேருந்து ஆம்பூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நான்குவழிச் சாலையில் சென்றது. அப்போது இதனை பார்த்த ஆம்பூர் 28வது வார்டில் வசிக்கும் திமுக நகர மகளிர் அணியின் துணை செயலாளர் தேவயாணி என்கிற 60 வயது பெண்மணி, எங்க செயல்தலைவர், பேருந்துகள் எதுவும் ஓடக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டார், ஆனால் பேருந்து இயக்கறானுங்க என திட்டிக்கொண்டே திமுக கொடியுடன் சாலையின் குறுக்கே அந்த பெண்மணி தனியாளாக ஓடினார்.
அதற்குள் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகம் எடுக்க முயன்றார். தேவயாணி பாட்டி விடாமல் தனியாளாக கொடியுடன் சாலையின் மையத்தில் நின்றுவிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். "எங்களுக்காகவா பந்த் அறிவிச்சோம்? மக்களுக்காக தானே அறிவிச்சியிருக்கிறோம்? உங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறையில்லையா?" என கேள்வி கேட்டவர், "பேருந்தை எடுத்தன்னா கண்ணாடியை உடைச்சிடுவேன்" என தன் கையில் இருந்த கொடிக்கம்பைக் காட்டி பேச ஓட்டுநர் அதிர்ச்சியாகி இறங்கி வந்து, 'இப்போ போய்டுறோம், திரும்பி வரல' என சமாதானம் பேசினர்.
திமுக உட்பட மற்ற கட்சியினர் தேவயாணியை சமாதானம் செய்து பேருந்தை விட்டுடுங்க எனச்சொல்ல அவரும் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொள்ள பேருந்து கிளம்பி சென்றது. தேவயாணி அதன்பின் சாலைமறியல், இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, திமுக கொடியுடன் தேசிய நெடுஞ்சாலையில் வயதான காலத்திலும் தனி மனுசியாக திமுக பெண்மணி நடுரோட்டில் பேருந்தை மறித்த வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அந்த பாட்டியை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி, ஒற்றை மனுஷியாக பேருந்தை மறித்து கெத்து காட்டிய திமுக நகர மகளிர் அணியின் துணை செயலாளர் ஆம்பூர் தேவயானி இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.