Skip to main content

“இது என்ன பாணி அரசியல்?”- மு.க.ஸ்டாலின்

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 

mk stalin

 

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனது கருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இன்று இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக்கில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?

'ஜனநாயகப் படுகொலை' என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ - நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? - பாஜக சித்து விளையாட்டு என்பதா?

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு!” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்