திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , நேற்று (12-07-2019) கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிய உரையின்விவரம் பின்வருமாறு:
’’அன்புள்ள, தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய, பொருளாதாரமும் இலக்கியமும் இரு கண்கள் என்று ஏங்கியவருக்குரிய மத்திய முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களே, நேற்றைய தினம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், நாடாளுமன்றத்தில் புயலாகவும் - இலக்கிய மேடைகளில் தென்றலாகவும் வீசக்கூடிய அண்ணன் வைகோ அவர்களே, தமிழ் இலக்கியம் என்றாலே 'நீதி இலக்கியம்' தான் நீதி அரசியாக மட்டுமல்ல இலக்கிய அரசியாகவும் இங்கு வருகை தந்து உரையாற்றி இருக்கக்கூடிய நீதியரசர் சகோதரியார் விமலா அவர்களே, இந்த நூலின் ஆசிரியர் இதுவரை கவிப்பேரரசாக மட்டுமே இருந்து இனி உரைப்பேரரசாகவும் போற்றப்படக்கூடிய விழா நாயகனாக, நிறைவாக ஏற்புரை நிகழ்த்தயிருக்கக்கூடிய கவிப்பேரரசு மதிப்பிற்குரிய வைரமுத்து அவர்களே, இந்த விழாவினை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய வெற்றித் தமிழர் பேரவையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, பெரும் திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, அன்பிற்குரிய தமிழ் சான்றோர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
காலம் கடந்து கொண்டிருக்கின்றது. நீண்ட நேரமாக நீங்களும் இந்த அரங்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நான் சுருக்கமாக இந்த நூலில் இருக்கக்கூடிய சில செய்திகளை தலைப்புச் செய்திகளாக எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது. முதலில் இந்த விழாவிற்கு தலைமை ஏற்று இந்த தமிழாற்றுப்படை நூலினை வெளியிடக்கூடிய சிறப்பானதொரு வாய்ப்பினை, சிறப்பான வாய்ப்பு என்று சொல்வதை விட அரிய வாய்ப்பை, ஏன் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நல்வாய்ப்பை நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்காக முதலில் நான் என்னுடைய இதயபூர்வமான நன்றியை வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொட்ட துறைகளிலெல்லாம் வெற்றி பெறக் கூடிய ஆற்றலைக் கொண்ட ஒரு மிகப்பெரிய தமிழ் அறிஞராக அவர் விளங்கிக் கொண்டிருக்கின்றார். முதன்முதலில் அவருடைய வைகறை மேகங்கள் கவிதை தொகுப்பு இலக்கிய உலகில் இருக்கக்கூடிய பலரின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்தது.
அதேபோல், முதன் முதலில் திரைப்படப்பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பட்டி தொட்டிகளெல்லாம் பரவக்கூடிய எல்லோரும் உச்சரித்து பாடக்கூடிய நிலை உருவாகியிருந்தது. திரைத்துறையில் அவர் அளவுக்கு தேசிய விருது வாங்கிய கவிஞர் இந்தியாவிலேயே இல்லை. அவர் எழுதிய புதினம், கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த இரண்டு காவியங்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட மகத்தான கவிஞரிடமிருந்து நமக்கு கிடைத்திருப்பது தான் இந்த தமிழாற்றுப்படை என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த புத்தகத்தின் துவக்கத்தில் அவர் எழுதி இருக்கின்றார். என்னவென்றா, எனக்கு நண்பராய் - மந்திரியாய் - நல்லாசிரியருமாய் விளங்கிய கலைஞர் அவர்களே, நீங்கள் இல்லாமல் வெளிவரக்கூடிய இந்த நூலில் நீங்கள் இருக்கின்றீர்கள். எவ்வளவு உணர்ச்சியோடு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நன்றியுணர்ச்சிக்கு பெயர் தான் நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இல்லாவிட்டாலும் இந்த நூலில் அவர் இருக்கின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறார். நூலில் மட்டுமா இருக்கின்றார், கவிஞர் அவர்களே உங்கள் நெஞ்சில் - எண்ணத்தில் - எழுத்தில் இருக்கின்றார்.
கலைஞருடைய நினைவின்றி கவிஞரால் இருக்கவே முடியாது. அவரை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கவிஞர் பெறாத விருதுகள் இல்லை - கிடைக்காத பாராட்டுகள் இல்லை - செல்லாத நாடுகள் இல்லை - அவர் எழுதாத எழுத்துக்கள் இல்லை - தொடாத சிகரங்கள் இல்லை. எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அங்கிருந்தபடி கலைஞர் தான் எனக்கு ‘தமிழ் ஆசான்’ என்று உரத்த குரல் கொடுப்பதில் அவர் என்றைக்கும் பின்வாங்கியதில்லை. கவிப்பேரரசு அவர்களைப் பற்றி நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால். அற்ற குளத்தில் பறவை போல் இல்லாமல் கொட்டியும் ஆம்பலும் எல்லா நிலையிலும் கலைஞரோடு ஒட்டியிருந்தவர் நம்முடைய கவிப்பேரரசு. கடந்த 30 ஆண்டு காலமாக அவருடைய புத்தக வெளியீட்டு விழாவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கின்றாரா, அதிகாரம் அவர் கையில் இருக்கின்றதா, மத்திய அரசோடு நல்லுறவோடு இருக்கின்றாரா, அரசியல் சூழல் சாதகமாக இருக்கின்றதா போன்று அரசியலில் நிலைப்பாடு எப்படி இருந்தாலும் கிஞ்சிற்றும் அதைப்பற்றி கவலைப்படாமல் சிந்தித்துப் பார்க்காமல் தலைவர் கலைஞர் அவர்களுடைய கரத்தால் தான் தன்னுடைய புத்தகம் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தவர்.
கலைஞரின் மாணவனுக்கு உரிய பண்போடு, பணிவோடு செயல்பட்டவர்தான் நம்முடைய கவிப்பேரரசு அவர்கள். கவிப்பேரரசு என்ற பட்டமே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய பட்டம் தான். இவருக்கு தமிழ் தான் முதல் காதலி. இவருடைய எழுத்தாற்றலைப் பொறுத்தவரையில் கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்கள் வரையில் சென்று சேர்ந்தவை. தன்னுடைய இலட்சியத்தை - கொள்கையை எழுத்தின் மூலமாக எடுத்துச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலையும் துணிவையும் பெற்றவர் நம்முடைய கவிப்பேரரசர்.
அந்தத் துணிவு மிக்க எழுத்தாற்றலின் இன்னொரு வெளிப்பாடு தான் இந்த தமிழாற்றுப்படை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. காரணம் தமிழ் மொழியின் தன்மையை - திராவிட இனத்தின் பெருமையை எப்படியாவது சிதைத்திட வேண்டும். வடமொழி ஆதிக்கத்தைக் எப்படியாவது நிறுவிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அதற்காக பலர் துடிதுடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளக் கூடிய வலிமை தரக்கூடிய நூலாக இந்த தமிழாற்றுப்படை நம் கைக்கு கிடைத்திருக்கிறது அதுதான் உண்மை. தமிழர்களுடைய வரலாற்றை எவராலும் மறக்க முடியாது என்பதை சொல்லும் விதமாக தமிழாற்றுப்படை நூலை நம்முடைய கவிஞர் அவர்கள் நமக்கு தந்திருக்கின்றார். தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் வாழ்கின்றார்கள். உலகில் இருக்கக்கூடிய 57 நாடுகளில் ஏறத்தாழ அரைகோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச் சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு.
தொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி இருக்கின்றார். தொல்காப்பியம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட வடிவம் தான் என்பதை நம்முடைய கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது. சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100 பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.
கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும் பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு அவர்கள். ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோடு தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஏன், திராவிட ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் அவர்களையும் கவிஞர் மறக்கவில்லை. தலைவர் கலைஞரின் பெருமுயற்சியால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ என்கின்ற அங்கீகாரம் கிடைத்திருக்கின்றதே, அதையும் உணர்வோடு கவிஞர் அவர்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
மகனுக்கு தாய் பெயர் வைப்பது தான் வழக்கம். ஆனால், தாய்க்கு பெயர் வைத்த மகன் தான் நம்முடைய அண்ணா. நம்முடைய தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தவர் அறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவைப் பற்றியும், அவர் உருவாக்கி இருக்கக்கூடிய மறுமலர்ச்சியைப் பற்றியும் மிகச் சிறப்பாக நம்முடைய கவிஞர் எடுத்துக்காட்டி இருக்கின்றார்கள்.
திரை உலகில் தனக்கு முன்னோடிகளாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன். அதுபோல் இலக்கிய உலகில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோர். தன்னுடைய சமகால கவிஞர் கவிக்கோ. அப்துல் ரகுமான் என அனைவரையும் இந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கின்றார். இவ்வளவு பெயரையும் எழுதி விட்டு தலைவர் கலைஞர் அவர்களை விட்டு விடுவாரா இவர். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களின் 70 ஆண்டுகால திரைத் தமிழை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடைய சாதனைகளை – சிறப்புகளை - கலைஞர் ஏற்படுத்திய அந்த இராசாயன மாற்றத்தை இந்த நூலில் அவர் பதிவு செய்திருக்கின்றார்.
தலைவர் கலைஞரின் பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் எல்லாம் இன்றைக்கும் பேசக்கூடிய வகையில் புகழ் பெற்றவை. அதைத்தான் நம்முடைய முன்னாள் மத்திய அமைச்சர் இங்கு பேசுகின்ற பொழுது குறிப்பிட்டுச் சொன்னார். ஏனையோர் எழுத்துக்கள் எல்லாம் கதாபாத்தி ரங்களோடு உரையாடுகின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்களோ, கதாபாத்திரங்களை தாண்டி சமூகத்தோடு உரையாடுகின்றன. ஏனையோர் உரையாடலோ திரையோடு தேய்ந்து ஒழிகின்றது. ஆனால், கலைஞரின் உரையாடலோ திரையைக் கிழித்தெறிந்து தெருவுக்கே வருகின்றது. இதுதான் கலைஞரின் பேராற்றல்.
நான் நிறைவாக இந்த விழாவில் கூற விரும்புவது, நம்முடைய முன்னாள் மத்திய அமைச்சர் அழகோடு எடுத்துச் சொன்னார்கள். இன்றைக்கு நம்முடைய தமிழ் மொழிக்கு - தமிழ் இனத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்தைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள்.
தமிழினுடைய பெருமைகளை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் மும்மொழித் திட்டம் திணிக்கப்படக்கூடிய ஒரு நிலை வந்திருக்கின்றது. இரயில்வே துறையில் துவங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டக்கூடிய வேலையை துவங்கி இருக்கின்றார்கள். நாம் எல்லோரும் போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். அப்படி போராட வேண்டிய நிலைக்கு நமக்கு துணையாக கவிப்பேரரசு அவர்களின் தமிழாற்றுப்படை நமக்கு ஒரு ஆயுதமாக கிடைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழாற்றுப்படை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தை தமிழர்களுக்கு தந்திருக்கின்ற அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளை நன்றியை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கின்றேன்.’’