Skip to main content

சென்னையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Minister Udayanidhi inaugurated the flower exhibition in Chennai

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று (10.02.2024) முதல் தொடங்கியுள்ளது. இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 150 ரூபாயும், குழந்தைகளுக்கு ரூ. 75 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 28 வகையிலான சுமார் 12 லட்சம் மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள்  காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி மற்றும் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி சுமார் 10 நாட்கள் வரை நடைபெறும் என தோட்டக்கலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடக்க விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா எனப் பலரும் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
arrested ADMK executive in Armstrong case she from party removed

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக  சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மேலும்  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யபட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டார்.

எனவே கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்கொடி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி கடந்த 2001 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தக்காளி விலை சரிவு; பொதுமக்கள் நிம்மதி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Tomato prices fall; Public relief

தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் மற்றும் அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது.

அதன் காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் நேற்று (17.07.2024) ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (18.07.2024) ஒரு கிலோ தக்காளி ரூ.55 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இதற்கிடையே தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் ரேசன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.  அதே சமயம் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது வெளிச் சந்தைகளை விட பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.15 முதல் ரூ.20 வரை குறைவாக விற்கப்படுகிறது.