தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அண்மையில் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டிருந்தார். த.வெ.க.வின் முதல் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டு மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடம் பார்த்து வந்த விஜய் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 23 ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதியும் த.வெ.க. வாங்கியுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வரும் நிலையில் தற்போது மாநாடு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்படவுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும், த.வெ.க.விடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 6 மாதத்திற்கு மட்டுமே ஓடும் அதற்குமேல் ஓடாது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளார். தாம்பரம் அருகே நடந்த திமுக நிகழ்ச்சியில் ஒன்றில் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய தா.மோ.அன்பரசன், “சினிமா நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஏற்கனவே அரசியலுக்கு வந்த நடிகர்களின் நிலையெல்லாம் என்ன ஆனது? என்று நாம் பார்த்திருக்கிறோம். விஜயகாந்த் கட்சித் தொடங்கி என்ன ஆனார்? அதேபோல்தான் தற்போது ஒருவர்(விஜய்) கட்சித் தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார். அந்த நடிகர் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடுவதில்லை. படமே ஓடவில்லை என்றால், அவர் தொடங்கிய அரசியல் கட்சி 6 மாதங்கள் மட்டுமே ஓடும்; அதற்குமேல் ஓடாது. ஆனால் தொடர்ந்து ஓடும் இயக்கம் திமுக தான். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது” என்றார்.