டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என வெளியான செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து “மே 20-ம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் மதுக்கடையில் எக்காரணம் கொண்டும் வாங்கக் கூடாது” என டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க எந்தவிதத் தடையுமில்லை எனவும் கூறியுள்ளார்.