திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து தான் நத்தம் ஊராட்சி ஒன்றியம், உலுப்பகுடியில் ரூ.57.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலம்பட்டி ஊராட்சி, சேர்வீடு மற்றும் ஆவிச்சிபட்டி ஊராட்சி, நடவனுார் கிராமங்களில் தலா ரூ.14.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டங்கள், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செல்லப்பநாயக்கன் பட்டி ஊராட்சி இடையப்பட்டியில் ரூ.16.55லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், பரளிபுதுார் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.38.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், நத்தம் பேரூராட்சியில் வாணியர் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.37.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என மொத்தம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் மற்றும் குட்டூர், செல்லப்பநாயக்கன்பட்டி, சம்பைப்பட்டி, கம்பிளியம்பட்டி, கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டது. இந்த நிலையில் இதனை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
அதன் பின் பத்திரிகையாளரிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “பிரதமராக மோடி பதவி ஏற்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் செல்லவில்லை. மாறாக தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான போதிய நிதியை ஒதுக்கக் கோரியும் முதல்வர் பிரதமரை சந்தித்துப் பேசி உள்ளார். இந்த சந்திப்பால் திமுகவிற்கு பாஜகவிற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்றார்.
இதனையடுத்து, ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். தற்போது கலந்து கொள்கின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். தற்போது உயர்வு கல்வித்துறை அமைச்சராக உள்ள கோவை செழியனும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்து திமுகவும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கும் என்று முடிச்சு போட வேண்டாம்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கூட்டுறவுச் சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விஜயன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.