திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றதின் மூலம் உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சராக சக்கரபாணியை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து வாக்களித்த மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சிக்காக இரண்டு கலைக்கல்லூரி, ஐடிஐ, கலைஞர் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள், விவசாய பொருட்களை வைப்பதற்காக குளிர்சாதன கிடங்கு, மார்க்கெட் மற்றும் ஆயிரம் கேடியில் தொகுதியில் நிரந்தர காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், ஒட்டன்சத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அதுபோல் இடையகோட்டை பசுமை மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் நட்டு மரமாய் வளர்த்து இயற்கை சூழலை உருவாக்கி இருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது கொத்தயம் அருகே தொகுதி மக்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் தொழிற்பேட்டையை 55 ஏக்கரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயனளிக்கும் வகையில் நூறு சிறு குறு தொழிற்கூடங்களைக் கொண்டு வர இருக்கிறார். இப்படி கோடிக்கணக்கில் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியும், செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறார்.
அதுபோல் நகராட்சியாக உள்ள ஒட்டன்சத்திரத்தில் பல அடிப்படை வசதிகளை கொண்டு வந்து நகரில் உள்ள சாலைகளை அகலப்படுத்தி சாலையின் நடுவில் மின்விளக்குகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்தும் இருக்கிறார். அதுபோல் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலை, குடிநீர், மின்சாரம் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும் இருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் தொகுதி மக்களும் எங்கள் பகுதிக்கு மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் இருப்பது போல் நகரும் படிக்கட்டுகளை கொண்டு வர வேண்டும் என அமைச்சர் சக்கரபாணியிடம் நகர மக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து தான் அமைச்சர் சக்கரபாணியும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையின்போது 28 கோடியில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் இரண்டு இடங்களில் அமைக்கப்படும். அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மற்றும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணி முதல்வரைச் சந்தித்து வாழ்த்து கூறனார். இப்படி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகரும் படிக்கட்டுகளோடு கூடிய மேம்பாலத்தை அமைச்சர் சக்கரபாணி கொண்டு வந்திருக்கிறார். இதற்கு தொகுதி மக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் இருக்கிறார்கள். அதோடு தொகுதி அமைச்சரான சக்கரபாணிக்கும் தொகுதி மக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் நேரில் சென்று மாலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தும் செல்போன் மூலமும் நன்றி தெரிவித்தும் வருகிறார்கள்.