Skip to main content

“சிலரிடம் பேச்சு இருக்கும் உழைப்பு இருக்காது” - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
Minister MRK Panneerselvam speech at Chidambaram

சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்ற கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறியாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்ஆர்கேபி. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்துதார்.

பின்னர் பேசிய அவர், “என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் இந்த மாவட்டத்தில் 88 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். எனக்குத் தொடக்கத்தில் மேடையில் அதிகம் பேச்சு வராது. ஆனால் செயல்பாடு உண்டு. சிலர் நல்லா பேசுவார்கள். ஆனால் செயல்பாடு இருக்காது. பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது செயல்பாடு இருக்க வேண்டும். பொறுப்பிற்கு ஏற்றவாறு நடிக்காமல் கடுமையாக உழைத்தால்தான் பதவிக்கு வர முடியும். சிலரிடம் உழைப்பு இருக்கும் பேச்சு இருக்காது. சிலரிடம் பேச்சு இருக்கும் உழைப்பு இருக்காது.

இந்த இரண்டையும் சேர்த்தால்தான் அரசியலில் முன்னேற முடியும். இயற்கையாக உடல், கை அசைவுவுடன் (Body Language) இயல்பாகப் பேச வேண்டும். திமுக தலைமைக்காகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கூட்டத்திற்கு வருவார்கள். அது போன்று பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். மேடையில் ஏறினால் பயமின்றி பேச வேண்டும். உதயநிதி ஸ்டாலின்  உழைப்பினால் இளைஞரணி செயலாளராகி, அமைச்சராகி உள்ளார். எதிர்காலத்தில் தலைவராக உயர வாய்ப்பு உள்ளது.

நான் உணர்வுப்பூர்வமாக உழைப்பவன். அந்த குணாதிசயத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அந்த உணர்வுப்பூர்வமான உழைப்பினால்தான் திமுக ஆலமரமாக வளர்ந்து உள்ளது. ஏறிய ஏணியை எட்டி உதைக்கக்கூடாது. எனக்கு ஏணியில் ஏறிய பிறகு எட்டி உதைக்கின்ற பழக்கம் கிடையாது. இளைஞரணியினர் வீடு, வீடாக சென்று மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுப்போட்டியில் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ஆடுதுறை உத்தராபதி, ஊடகவியலாளர் அருள்அமுதன் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவர்களைத் தேர்வு செய்தனர்.  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.மதியழகன் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்