ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் அவசர ஊர்தியை வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை 102 இலவச தொலைப்பேசி எண் கொண்ட தாய், சேய் அவசர ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் மருத்துவமனையில் ரூ 3 கோடியே 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திறனறிவு பயிற்சி ஆய்வகத்தினையும் உயர் சார்பு தீவிர சிகிச்சைப் பிரிவினையும் ஆய்வு செய்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களைக் கேட்டார். மேலும் இதனை நல்ல முறையில் பராமரித்து ஏழை மக்களுக்குத் தொடர்ந்து உதவி கிடைத்திடும் வகையில் செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.