முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131- வது பிறந்தநாளையொட்டி, சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதில் மாற்றம் இருக்காது. இந்தி கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் பயிற்சி மையங்களில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. கரோனா இரண்டாவது அலை வாய்ப்பு உள்ளதால் மதம் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார்கள் வந்ததன் அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை; கூட்டணி வேறு, கொள்கை வேறு.
நரகாசுர இயக்கமான தி.மு.க.வை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். வருகிற தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி அ.தி.மு.க. ஆட்சி மலரும். சட்டத்தை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரை சென்றால் சட்டம் அதன் கடமையை செய்யும். கரோனாவுக்கு பயந்து 4 சுவற்றுக்குள் அமர்ந்து அறிக்கை விடாமல் கமல் வெளியே வந்து பார்க்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.