வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை கோட்டத்துக்கு உட்பட்ட வாலாஜா ஒன்றியம் புளியங்கன்னு கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை தமிழ்ச்செல்வி. 12 ஆம் வகுப்பில் 757 மதிப்பெண் எடுத்தார். அப்படி எடுத்தும் திருநங்கை என்பதால் அவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் நர்ஸிங் படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதுப்பற்றி மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்தில் புகார் செய்தார். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றனர். இரண்டு ஆண்டுகளாக பெரும் போராட்டத்துக்கு பின்னரும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் இந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நடக்கும்போதே மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த ஆண்டு அவருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் வேலூர் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையில் டீன் சாந்திமலர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் தந்தார். இவரது விடா முயற்சியால் ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிய இவரை பாராட்டும் விதமாக வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, திருநங்கை தமிழ்ச்செல்வியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அப்போது தமிழ்ச்செல்வி, இச்சமூகத்தால் தான் அடைந்த துயரத்தை கூறியபோது ரவி கண்கலங்கினார். தான் மனம் தளர்ந்த போது தனது தாய் வழங்கிய ஆறுதல்களும், நம்பிக்கையும் தான் தன்னை போராடி வெற்றி பெறவைத்தது எனச்சொன்னதும் நெகிழ்ந்தவர், தன் குடும்பத்தில் ஒருவர் திருநங்கை யாகிவிட்டால் பெற்ற தாயேக்கூட அவரை ஒதுக்கி வீட்டை விட்டு துரத்தும் நிலையில் நீங்கள் அப்படி செய்யாமல் அரவணைத்து சாதிக்க தூண்டிய உங்களை பாராட்டுகிறேன் என்றார்.
உங்களுக்கு தலைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு எங்களால் முடிந்த சிறு உதவி என ரூ.5000 ஆயிரம் நிதியுதவியும் தந்துவிட்டு வந்துள்ளார்.