
சேலத்தில், அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறாக தகவல் பரப்பிய அமமுக நிர்வாகியை போலீசார் இன்று (அக்டோபர் 27, 2018) கைது செய்தனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது சமீபத்தில் சிந்து என்பவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இது, அனைத்து சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேஸ்புக், வாட்ஸ்அப்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதுபோன்ற போட்டோஷாப் மூலம் டிசைன் செய்யப்பட்ட ஒரு படம், வாட்ஸ்அப்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாராபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த ரங்கநாதன் (30) என்பவர்தான் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறான படத்தை பகிர்ந்திருப்பது தெரிய வந்தது. மேலும், அவர் டிவிடி தினகரனின் அமமுக கட்சியில் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ரங்கநாதனை இன்று கைது செய்தனர்.