தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்கு 11.30 மணிக்கு வந்தார். அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வுசெய்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “பதவியேற்று ஆறு மாதத்திற்குள்ளாக இந்த இடத்திற்கெல்லாம் வந்து ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கரோனா காரணமாக தள்ளிப்போய்விட்டது. சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கில், ஒரு சட்டம் போடப்பட்டிருக்கு. அதில், ஒவ்வொரு தினத்திற்கு ஒவ்வொரு அளவு நீர் கொள்ள அளவை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன்படி இன்று 139.50, அதேபோல், நவம்பர் மாதம் 30ஆம் தேதி 142 வரை வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வந்ததால் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போயிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் நீர் திறக்கப்பட்டது. அதனால் தான் இந்தக் குழப்பங்கள். இது நீண்ட கால பிரச்சனை. 1979ல் இந்தப் பிரச்சனை வந்தபோது வழக்குக்கு சென்றது. அதில், தற்காலிகம், இடைக்காலம், நீண்டகால திட்டம் என மூன்று திட்டங்கள் வந்தது. அதனை அனைத்தும் செய்து முடித்தோம். அவை எல்லாவற்றையும் முடித்து நாங்கள் 152, 142 அடி வரை நீர் கொள்ள அளவை உயர்த்தவேண்டும் என்று கேட்டபோது, பேபி அணையை சரி செய்ய வேண்டும் என்றனர். இன்று தான், பேபி அணையை பார்த்துவிட்டுவந்தேன். அதன் கீழ் மூன்று மரங்கள் இருக்கின்றன. அதனை அகற்ற கேரளா அரசிடம் கேட்டால், அது வனத்துறையிடம் இருக்கிறது என்கிறார்கள். வனத்துறையிடம் கேட்டால், ரிசர்வ வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகையால், அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த மூன்று மரங்களும் அகற்றிவிட்டு அந்த அணையை சரி செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள 142க்கு செல்வோம்.
முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து பேச ஓ.பி.எஸ்.க்கும், ஈ.பி.எஸ்.க்கும் தார்மீக உரிமை கிடையாது. அவர்கள் இருவரும் இந்தத்துறைக்கு மாறி மாறி அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த பத்தாண்டு காலத்தில், இந்தத் துறை அமைச்சர் என்றாவது ஒரு நாளாவது இந்த அணையை வந்து பார்த்திருக்கிறார்களா?
நான் இந்த 80 வயதில், படிக்கட்டு ஏறமுடியாமல் தட்டி தட்டி ஏறிச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். அவராவது சேலத்துக்காரர். இவர் தேனிகாரர். இவர்கள் போய் பார்க்காமல் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் நாடே சிரிக்காதா?” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், பேபி அணையில் இருக்கும் மரங்கள் ஏழு ஆண்டுகளாக இன்னும் வெட்டப்படாமல் இருக்கின்றதே? என்று கேட்டதற்கு, பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன், “நான் வந்து ஆறு மாதங்கள் ஆகின்றது. இப்போது அனுமதி வாங்கி விடுவேன். எந்தப் பத்திரிகையாளர்களையாவது அவர்கள் சந்தித்ததுண்டா.? உண்ணாவிரதம் இருக்கும்போது அந்தப் பக்கம் போய் அவர்களிடம் கேட்டுவிடுங்கள். என்ன சொல்றாங்க பார்க்கலாம்” என்றார்.