கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அமைச்சருக்கு மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து அமைச்சருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் அமைச்சரின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு மோசம் அடைந்துள்ளது’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.