Skip to main content

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடத்தப்படுமா? என்பதுதான் மில்லியன் டாலர் வினா: ஜி.கே.மணி

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
GKMani


 

கூட்டுறவு சங்கத் தேர்தலில் பா.ம.க போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ள ஜி.கே.மணி, இந்த தேர்தல் முறையாக நடத்தப்படுமா? என்பது தான் மில்லியன் டாலர் வினா என கூறியுள்ளார்.
 

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் 5 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஆனால், இவை முறையாக நடத்தப்படுமா? என்பது தான் மில்லியன் டாலர் வினா.
 

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உள்ளிட்ட 15 அரசு துறைகளில் மொத்தம் 18,775 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் தொடக்க நிலை கூட்டுறவு அமைப்புகளான 18,435 சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி அன்புமணி இராமதாஸ் ஆகியோருடன் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில்  நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேண்டும். இதற்காக அந்தந்த பகுதிகளில் தேர்தல் குழுக்களை அமைத்து உறுப்பினர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
 

கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2013&ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில்  சங்க அதிகாரிகளின் உதவியுடன் மிகப்பெரிய அளவில்  முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டன. பல இடங்களில் அதிமுகவினரைத் தவிர மற்றவர்களால் வேட்பு மனுவைக் கூட தாக்கல் செய்ய முடியவில்லை. இன்னும் சில இடங்களில் தேர்தலே நடத்தாமல் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கொடுமைகளும் நடந்தன.
 

கடந்த காலங்களைப் போல இல்லாமல் இந்த ஆண்டாவது கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த ஆணையம் நடவடிக்கை  எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு உயரதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்