Skip to main content

மெட்ரோ ரயில் நிலையங்களைத் தாமதமாக கட்டிக்கொடுத்த விவகாரம்! -வங்கி உத்தரவாதத்திலிருந்து ரூ.143 கோடி வசூலிக்க தடையில்லை!

Published on 16/08/2020 | Edited on 17/08/2020
chennai high court

 

 

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களைத் தாமதமாக கட்டிக் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து  ரூ.143 கோடியை வசூலிக்க,  மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

 

சென்னையில், ஷெனாய் நகர், அண்ணாநகர், திருமங்கலம், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில், மெட்ரோ ரயில்  நிலையங்கள் கட்ட 2,596 கோடி ரூபாய்க்கு மும்பை மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுடன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.

 

ஒப்பந்தத்தில் கூறியபடி, குறித்த காலத்தில் பணிகளை முடிக்காமல், 3 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தியதாகவும், பணிகளை அரைகுறையாக பாதியில் விட்டுள்ளதாகவும் கூறி, இந்த நிறுவனங்கள் அளித்த வங்கி உத்தரவாதத்தில் இருந்து ரூ.143 கோடியே 28 லட்சத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து மும்பை மற்றும் ரஷ்யா நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வங்கி உத்தரவாதத்தில் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்து, மும்பை மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக, இந்த உத்தரவை ஆகஸ்ட் 21 வரை நிறுத்தி வைத்த நீதிபதி,  அதற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், வங்கி உத்தரவாதத்தின்படி, மெட்ரோ ரயில் நிர்வாகம் வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்