
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் 20 லட்ச ரூபாய் வரை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, “கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முத்தியால் பேட்டையில் ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை செய்தோம். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில், மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தற்கொலைக்கான காரணத்தை விசாரணை செய்தபோது அந்த மாணவி இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது. அடையாளம் தெரியாத நபர் மாணவியின் ஐடிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதில் 750 ரூபாய் பணம் கொடுத்தால் 23 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும் என்ற பொய் பிரச்சாரம் செய்துள்ளனர்.
அந்த குறுஞ்செய்தியை நம்பி மாணவியும் 37 ஆயிரத்து 500 ரூபாயை ஜிபே மூலமாகச் செலுத்தியுள்ளார். தொடர்ந்து தனக்கான வட்டி வரும் என்று மாணவி காத்திருந்துள்ளார். சில நாட்கள் ஆகியும் எந்த ஒரு பதிலும் பணம் பெற்றவரிடம் இருந்து வரவில்லை. இதனால் அந்த மாணவிக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. அம்மாணவி மீண்டும் பணம் கொடுத்த நபரை தொடர்பு கொண்டு, தான் கொடுத்த பணத்தையாவது திரும்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கும் எதிர்த்தரப்பிடம் இருந்தும் பதில் ஏதும் வராத நிலையில், மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதன் பின் இந்த வழக்கு ஏமாற்றப்பட்ட வழக்காகப் பதிவு செய்து அதன் தொடர்ச்சியாக இறந்து போன மாணவியின் வங்கி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அவரின் இன்ஸ்டாகிராம் ஐடியினை சைபர் அனாலிசிஸ் செய்து, சென்னை பெருநகர காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்தது.
தொடர்ந்து காவல்துறையினர் 28 ஆம் தேதி கொல்கத்தாவிற்கு சென்றனர். 14 தினங்கள் அங்கேயே இருந்து வங்கி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டு விசாரணை செய்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் கடந்த 10 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த மூவரும் கடந்த சில தினங்களாகவே இம்மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அவர்களை யாரும் பிடிக்கவில்லை. ஏறத்தாழ 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் மூலம் இந்தியா முழுவதும் ஏமாற்றி உள்ளனர். அவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இளம் தலைமுறையினர் சோசியல் மீடியாவில் அடையாளம் தெரியாத நபர்களிடம் வரும் குறுஞ்செய்திகளுக்கு பணம் அனுப்பும் பழக்கங்களை வைத்துக் கொள்ளக்கூடாது. பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் தற்கொலை செய்ததும் மிகுந்த வருத்தமளிக்கும் விஷயம்” என்றார்.